திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்துவரும் கனமழையால் ஆலப்புழா, இடுக்கி,மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் ரூ.8,316 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
440 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு 50 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கையும் 33 ஆக உயர்ந்துள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 3 தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 6 பேரை காணவில்லை. இடுக்கி 3 பேரும், மலப்புரம், பாலக்காடு, ஆலப்புழாவில் தலா ஒருவரும் அடங்குவர். கன மழையால் வயநாடு, இடுக்கி, மலப்புரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. ராணுவம், கடற்படை, விமான படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை பார்வையிட கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, வருவாய் துறை அமைச்சர் ஆகியோரும் சென்றனர். மோசமான வானிலை காரணமாக இடுக்கியில் ஹெலிகாப்டர் தரையிறக்க முடியவில்லை. இதையடுத்து ஹெலிகாப்டர் வயநாட்டுக்கு புறப்பட்டு சென்றது. தொடர்ந்து கல்பற்றாவிற்கு சென்ற அவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். இதையடுத்து அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: மழையால் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், வீடு இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும் வழங்கப்படும். வீடு, நிலங்களை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்று கூறினார். இதன் பின்னர் கொச்சி சென்றார். அங்கு எர்ணாகுளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.